காவல்துறை சீருடை அணியாமல் வலம் வந்தாலும், தனது கம்பீரமான நடிப்பு மூலம் காவல்துறை அதிகாரியாக அர்ஜூன் மிளிர்கிறார். தனக்கே உரித்தான வசன உச்சரிப்பும் உடல்மொழியும் கொண்டு அர்ஜுன் கவர்ந்திழுக்கிறார் என்றாலும், அவரது ஆக்ஷன் திறனுக்கு இப்படத்தில் போதிய தீனி இல்லை என்பதே உண்மை. முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், அதிரடித் தருணங்களிலும் ஆரம்பக்கட்ட காதல் காட்சிகளிலும் அவரது உடல்மொழி ஒட்டாமலே இருப்பது ஏமாற்றம்.சரவணன் அபிமன்யு, காட்சிக் கோணங்களில் பெரிய வித்தியாசம் காட்டவில்லை. பல காட்சிகளை க்ளோஸ்-அப்புகளிலேயே செல்வது பொறுமை இழக்க செய்கிறது.

மர்ம நபரால் பிரபல எழுத்தாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜூன் விசாரிக்கிறார். மறுபக்கம் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ், திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிப்பதோடு, அவருடன் நெருக்கமாக பழக தொடங்குகிறார்.
மறைத்து வைக்கப்பட்ட தடயங்கள் மூலம் விசாரணையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று தனது புலன் விசாரணை மூலம் காட்சிகளை வேகமாக நகர்த்திச் செல்லும் அர்ஜூன், தனது பாணியில் அட்டகாசமான சண்டைக்காட்சியில் தனது ரசிகர்களை திருப்தியடைய முயற்ச்சித்துள்ளார் .குறிப்பாக மின் தூக்கியில் வரும் சண்டைக்காட்சியில்..
அர்ஜூன் மேற்கொள்ளும் விசாரணையில் கொடூர கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, அது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தும் போது, மேலும் ஒருவர் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார்.
யார் அந்த மர்ம நபர் ? கொலைகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கும் என்ன சம்மந்தம் ?
ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறாரா? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை வழக்கமான பொறுமையினை சோதிக்கும் வகையில் சொல்வதே ‘தீயவர் குலை நடுங்க’.
ஆட்டிசம் பாதிக்கப்பட்டவராக வரும் சிறுமியும் வேல ராமமூர்த்தியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு கட்சிதமாக பொருந்தி உள்ளனர் .
காதல் காட்சிகளில் பிரவீன் ராஜா நடிப்பு ஒன்றும் சொல்வதற்கில்லை. உடல்மொழியும் வசன உச்சரிப்பும் வைத்தே நகைச்சுவை சித்திரவதை செய்திருக்கிறார் அவரின் நண்பராக வரும் ராகுல். பாரத் ஆசீவகனின் பின்னணி இசை, சில இடங்களில் பதற்றத்தை ஏற்றினாலும், பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு கொலையோடு வலுவான ஆரம்பத்தைத் தந்தாலும், பிறகு மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்கின்றன.

பார்த்து பழகிய பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் லட்சுமணன். ஒரு கொலை, அதன் பின்னணி, ஒரு பிளாஷ்பேக் என வழக்கமாக பல படங்களில் நாம் பார்த்த கதையை அப்படியே எடுத்திருக்கிறார். முதல் பாதையில் திரைக்கதை புரியாமல் செல்கிறது. பழகிப்போன, திருப்பங்களோடு இடைவேளை வருகிறது.
இரண்டாம் பாதியில் வழக்கமான திரைக்கதையாகவே செல்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத ஒரு திருப்பம் பார்வையாளர்கள் எதிர்பார்த்ததாகவே இருந்தது . படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், தேர்ந்த காட்சிகளுக்கான வறட்சியைப் போக்க முடியாமல் திணறியிருக்கிறார். இன்னும் சுருக்கமாக அமைந்திருந்தால் களைப்பு சற்று குறைந்திருக்கும். மொத்தத்தில் இன்றைய பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பார்க்கும் படியான ஓர் எச்சரிக்கையாக கதையின் அடிநாதம் உள்ளது . அந்த முயற்சிக்காக இயக்குநரைப் பாராட்டலாம். சிறந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வந்திருக்க வேண்டியது, என்னவோ எளிதில் கடந்து செல்ல கூடிய படமாகிவிட்டது.











